கோவை:விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது.
அதில், நிறைவேற்றிய தீர்மானங்கள்:
தமிழக கவர்னர், தமிழ்நாடு என்று சொல்வவதை விட, தமிழகம் என்று தமிழ் பண்பாட்டுக்கு ஆதரவாக பேசியதை செயற்குழு பாராட்டுகிறது. சென்னையில் நடந்த கிராம கோவில் பூசாரிகள் கோவில் நிதி வழங்கும் விழாவுக்கு, காவி உடை அணிந்து வர தடை விதித்த, தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
கோவையில் வசிக்கும் இந்து இயக்க தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கிணத்துக்கடவு முருகன் கோவில், கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலிலும் தைப்பூசத் தேரோட்டம் நடத்த வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகர் மாவட்ட செயல் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் சோமசுந்தரம், இணை பொது செயலாளர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினர். கோவை கோட்ட தலைவர் ஹரிபிரசாத், தெற்கு மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், கோட்ட அமைப்பாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.