கோவை:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், செல்வபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே குடியிருந்தவர்களில், 288 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக, உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு டிச., 7ல் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். முதல்கட்டமாக, 10 பேருக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டது. மீதி பேருக்கு, 15 நாட்களில் தருவதாக கூறப்பட்டது. அதன்படி வழங்காமல் இழுத்தடிப்பதாக, கலெக்டர் சமீரனை பொதுமக்கள் சந்தித்து முறையிட்டனர். அப்போது, பொங்கல் பண்டிகைக்கு முன் உத்தரவு தருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், உத்தரவு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதனால், செல்வபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, 50க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகையிட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம பேசி முடிவு செய்து, சனிக்கிழமைக்குள் ஒதுக்கீடு உத்தரவு தருவதாக, அதிகாரிகள் கூறியதால், கலைந்து சென்றனர்.