புதுடில்லி, 'சுய விளம்பரத்துக்காக அரசு பணத்தை செலவிட்ட விவகாரத்தில், 163 கோடி ரூபாயை 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்; இல்லையெனில், கட்சி அலுவலகத்துக்கு, 'சீல்' வைக்கப்படும்' என, ஆம் ஆத்மி கட்சிக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு மாநில அரசு சார்பில் ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி, அரசு விளம்பரம் என்ற போர்வையில், அரசியல் விளம்பரம் கொடுக்கப்பட்டதாக, மத்திய அரசின் விளம்பரங்கள் ஒழுங்குமுறை குழு புகார் தெரிவித்தது.
![]()
|
கடந்த 2017 வரை இதுபோன்ற விளம்பரங்கள் கொடுக்கப்பட்டதற்கான தொகையான, 99 கோடி ரூபாயை திரும்பச் செலுத்தும்படி, ஆம் ஆத்மி கட்சிக்கு,புதுடில்லி செய்தி மற்றும்விளம்பரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், ஆறு ஆண்டுகள் ஆன பின்னும் இந்த தொகையை ஆம் ஆத்மி கட்சி செலுத்தவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கவனத்துக்கு சென்றது.
இதை ஆய்வு செய்த அவர், விளம்பர தொகையை ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து வசூலிக்கும்படி, புதுடில்லி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
முறைகேடாக விளம்பரம் வெளியிட்டதற்கான தொகை, 99 கோடி ரூபாய் மற்றும் அதற்கான அபராதமாக, 64 கோடி ரூபாய் என, மொத்தம், 163 கோடி ரூபாயை, 10 நாட்களுக்குள் திரும்பச்செலுத்த வேண்டும்.
இல்லையெனில் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுடில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா நேற்று கூறுகையில், ''முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், அவரது அமைச்சரவையில் உள்ளவர்களையும் பழிவாங்குவதற்காக, புதுடில்லியில் உள்ள அரசுத்துறை அதிகாரிகளை மத்திய அரசு சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது,'' என்றார்.
பறிமுதல் செய்ய வேண்டும்!
தங்களின் சுய விளம்பரத்துக்காக மக்களின் வரிப்பணமான, 163 கோடி ரூபாயை புதுடில்லி ஆம் ஆத்மி அரசு செலவிட்டுள்ளது. இந்த பணத்தை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். பணத்தை தராவிட்டால், ஆம் ஆத்மியின் வங்கி கணக்கை முடக்கி, அந்த கட்சி தலைவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
மனோஜ் திவாரி, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,