கோவை:''சனாதன தர்மத்தை காத்து நிற்பது நம் வேதங்கள்; இதை காப்பவர்களிடமே நம் ஓட்டுக்களை சமர்பிக்க வேண்டும்,'' என்று,இ.ம.க., தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
அகில உலக ஜனகல்யாண் (கோவை), பரசுராம் வித்தியார்த்தி சேவா டிரஸ்ட், 'தாம்ப்ராஸ்' கவுண்டம்பாளையம் கிளை சார்பில், 12ம் ஆண்டு கோடி லலிதா சகஸ்ரநாம ஜப யக்ஞம், 108 ஜோடி தம்பதி பூஜை, கோவை, ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்தது.
ஆயிரம் பிறை கண்ட, 170க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு தம்பதி பூஜை விழாவும், 91-108 வயதுள்ள, 21 ஜோடிகளுக்கு கனகாபிஷேகமும் நடந்தது. சகஸ்ரநாம மண்டலிகளுக்கும், சொற்பொழிவாளர்கள், 15 பேருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதில், இ.ம.க., தலை வர் அர்ஜூன்சம்பத் பேசுகையில், ''சனாதன தர்மத்தில் ஹிந்து பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. 80 வயது கடந்தவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள். சனாதன தர்மத்தை காத்து நிற்பது நம் வேதங்கள்; சனாதன தர்மத்தை காப்பவர்களுக்கே ஹிந்துக்கள் ஓட்டுக்களை செலுத்த வேண்டும். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை தொடர்ந்து இழித்தும், பழித்தும் பேசுகின்றனர். ஹிந்துக்கள் அனைவரும் இணைந்து நமக்கென்று ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, கோவை வராஹி பீடம் வராஹி மணிகண்ட சுவாமிகள் பேசுகையில், ''சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களுக்கானது. நாம் ஒவ்வொருவரும் அதை தவறாது பின்பற்றி பாதுகாக்க வேண்டும். அதற்கான வைராக்கியத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
குமுதம் புகழ் ஏ.எம்.ஆர்., காஞ்சிமடம் ஸ்ரீ ஆனந்த கனபாடிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண கனபாடிகள், பெஸ்டன் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் பிரியா, 'தாம்ப்ராஸ்' மாநில தலைவர் கணேசன், ஜனகல்யாண் மாநில பொது செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.