புதுடில்லி, ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கக் கோரும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் மனுவை, பிப்ரவரியில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தின் பாம்பன்தீவில் இருந்து, நம் அண்டை நாடான இலங்கையின் வடமேற்கே உள்ள மன்னார் தீவு வரையில், கடலில் ராமர் சேது பாலம் அமைந்துள்ளதாக ஹிந்துக்கள் நம்புகின்றனர்.
ராமாயண காலத்தில் இலங்கைக்கு செல்வதற்காக, ராமர் இந்தப் பாலத்தை கடலில் அமைத்ததாக கூறப்படுகிறது.
![]()
|
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கடல்வழி போக்குவரத்துக்காக இந்தப் பகுதியை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது.
ஆனால், கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ௨௦௦௭ல் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி, சுப்பிரமணியன் சாமி பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''கடந்தாண்டு டிச., ௧௨ல் பதில் மனு தாக்கல் செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை,'' என சாமி குறிப்பிட்டார்.
மேலும் அவகாசம் அளிக்கும்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டார். இதையடுத்து, பிப்ரவரியில் இந்த வழக்கை விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement