உருமாறும் பழைய 'வலி!'
பூ கட்சியில் 'மாஜி'க்குமேலிடம் சாதகமாக இருக்குதாம். இதனால் எதிர்ப்பு அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்தாலும், மாற்று கட்சிகளுக்கு 'பி' டீமாக சிலர் திசைமாற போறாங்களாம். 'மாஜி'யின் சுய லாபத்துக்காக அரசியல் அதிகாரம் கிடைக்க விடாமல் தடுத்த பழைய 'வடு' இன்னும் ரணமாக இருப்பதை பாதிக்கப்பட்டவர்கள் ஞாபகப் படுத்துறாங்க.
நகர அபிவிருத்தி குழும தலைவர் பதவி கிடைக்கும் என நம்பி இருந்தபோது, அதனை தனது வாரிசுக்கு பறித்த, பழைய 'வலி' அசெம்பிளி தேர்தலில் படமெடுத்து ஆட உருமாறுதாம். எப்படியும் சில ஆப்புகள், ஆபத்தை ஏற்படுத்தலாம் என தெரியுது.
மீண்டும் மவுசு!
புல்லுக்கட்டு மாநிலத் தலைமை கோல்டு சிட்டிக்கு வேட்பாளரை அறிவித்த பின், தன்னையே வேட்பாளராக இருக்குமாறு, தொட்ட கவுடர் ஆசி கூறியதாக, முக்கிய நபர் கம்ப்யூட்டரில் வித்தைகள் காட்டுறாரு.
ஆனா அவங்க கட்சிக்காரங்களே, 'பழைய செல்வாக்கு திரும்ப கிடைக்க வேண்டுமானால், ஒதுங்கி இருந்தவர்களை இழுக்கணும்; அவர்கள் மனம் மாற, அவர்களின் வீடுகளை தேட வேண்டும். சாம்பியன் பகுதியில் நீலக்கொடி, ரா.பேட்டையில் சின்னத்தை தலையில் வைத்துக் கொண்டாடுறாங்க' என கிண்டல் அடிக்கின்றனர். அதனால, இவர் போடும் கணக்கு சரிப்பட்டு வருமான்னு அங்கலாய்க்கிறாங்க.
பண்டிகை கால ரகசியம்!
கோல்டன் சிட்டியில் பண்டிகை வரும் போதெல்லாம் மாட்டிறைச்சி விற்பனையில் சட்டம் அதன் கடமையை செய்வதாசொல்றாங்க. இந்த கண்டிஷன் ஒரு சில நாட்கள் மட்டுமே. முனிசி.,யில் மாட்டு எலும்பு, தோல், இறைச்சிக்கு பல லட்சம் ரூபாய் ஏலம் விட்டு பணம் வசூலிக்கிறாங்க. அரசு சட்டம் போட்டாலும், மாட்டிறைச்சி பிரியர்கள் விருப்பத்தை ஒழிக்க முடியவில்லை.
ஆனா அண்டை மாநிலம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தடையை மீறி விற்பதை வாங்கி வந்து, வழக்கம் போல உண்பதை தடுக்க முடியவில்லை. பண்டிகை காலத்தில் மட்டுமே சட்டம் அதன் கடமையை செய்யுமாம். மற்ற நேரங்களில் மறந்து விடுவாங்களாம். இதற்காக பண்டிகை காலத்தில் ரகசியமாக விற்கப் போறாங்களாம்.