விருதுநகர்--விருதுநகர் நகராட்சியில் ஒருபுறம் தாமிரபரணி குடிநீர், மறுபுறம் உப்புநீர் என பாரபட்சமான குடிநீர் சப்ளையால் மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. அனைவருக்கும் தரமான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
விருதுநகரில் 36 வார்டுகளில் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 8 ஆண்டுக்கு முன் 10 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 36 லட்சம் லிட்டர் வர வேண்டிய நிலையில் 20 முதல் 30 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.
இதனை ரயில்வே லைன் கிழக்கு பகுதிக்கு வாரத்திற்கு ஒருமுறை வழங்குப்படுகிறது. ஆனால் மேற்கு பகுதிக்கு ஆனைக்குட்டம் தடுப்பணை, 10 கிணறுகள், 4 போர்வெல் மூலம் 11 மேல்நிலைத் தொட்டிகள் வழியாக 12 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது.
இதில் ஆனைக்குட்டம் அணையில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் உப்புநீராக சவட்டுத் தன்மையுடன் குடிக்க தரமற்று உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் சுவாசக் கோளாறு, சிறுநீரக கற்கள் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஆனைக்குட்டம் அணையில் இருந்து வினியோகத்தை நிறுத்தி ஒண்டிப்புலி நீர் தேக்கத்தில் இருந்து வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை நகராட்சிக்கு ரூ.444 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டபணிகள் நடந்து வருகின்றன. இதனை விரைவுபடுத்தி அனைத்து பகுதி மக்களுக்கும் பாரபட்சமற்ற தரமான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.