அருப்புக்கோட்டை-மாணவர்கள் சுதந்திரமாகவும் தனித்தன்மையுடனும் சிந்திக்க வேண்டும் என தேசிய இளைஞர் தின விழாவில் திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன் அறிவுரை கூறினார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். வரலாற்று துறை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.
திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன் பேசுகையில், இளைஞர்கள் குறிப்பாக மாணவிகள் தனித்தன்மையுடனும் சுதந்திரமாகவும் சிந்திக்க வேண்டும். மாணவிகளுக்கு இன்று அதிகமான வேலை வாய்ப்புகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் கிடைக்கிறது.
அவற்றை பயன்படுத்தி தங்களுடைய தனித்திறனை இந்த சமுதாயத்திற்கு வழங்க வேண்டும். இன்றைய சூழலில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது.
அது மாணவர்களின் எதிர்கால கனவுகளை கடுமையாக பாதிக்கும். எதிர்மறையான சமூக ஊடகங்களில் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் நல்ல தகவல் தகவல்களை மட்டும் பெற வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
சமூக விரோத நடவடிக்கைகளில் மாணவர்கள் விலகி இருக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். திட்ட அலுவலர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.