ராஜபாளையம்--''குடிதண்ணீரில் சாக்கடை கலந்து ஒரு ஆண்டாக வருவதை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை ,''என ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
ராஜபாளையம் நகராட்சி சிறப்பு கூட்டம் நகராட்சி தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. கமிஷனர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு
சங்கர் (காங்.,): சொத்து வரி குறைப்பு தீர்மானம் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் கோரிக்கை வைப்பது போன்ற நடவடிக்கை தேவையற்ற கால தாமதத்தையே கொண்டு செல்லும். அதுவரை மக்களுக்கு ஏற்ற இன்னல்கள் சந்திக்க நேரிடும் என்பதால் ரத்து தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
பவித்ரா, தலைவர்: ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரை சென்னையில் நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி உள்ளேன். தொடர்ந்து முயற்சித்து வரி குறைப்பிற்கான அடுத்தகட்ட பணிகள் தொடரும்.
ஜெகதீஸ்வரி, (தி.மு.க.,): எனது வார்டில் ஒரு வருடமாக தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. பல பிரச்னைகள் தொடர்ந்தும் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை.
சோலைமலை, (அ.தி.மு.க.,): எனது வார்டிலும் குடிதண்ணீர் பிரச்னை தொடர்கிறது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு தாமிரபரணி இணைப்பு வழங்கவில்லை.
பவித்ரா: நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கிடையே நகராட்சியால் கொண்டுவரப்பட்ட சொத்து வரி குறைப்பு தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மன்ற கூட்டங்களில் கேள்வி எழுப்பும்போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்பதில்லை, என்ற குற்றச்சாட்டினை பல கவுன்சிலர்கள் எழுப்பினர்.