விருதுநகர்--விளைச்சல் இருந்தும்கடந்த ஆண்டை காட்டிலும் கரும்புக்கு குறைவான விலையே கிடைப்பதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கான கரும்பு விருதுநகர் மாவட்டத்தில் எரிச்சநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இக்கரும்பு அறுவடை நடந்து வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் விளைச்சல் அதிகரித்திருந்தாலும் போதிய விலை இல்லை என்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து எரிச்சநத்தம் அருகே நடையனேரியை சேர்ந்த கரும்பு விவசாயி முத்துப்பாண்டி கூறியதாவது:பருவமழை நன்கு பெய்ததால் விளைச்சலில் எந்த பாதிப்பும் இல்லை.
சென்ற ஆண்டு 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு ரூ.300லிருந்து 320 க்கு விற்கப்பட்டது, தற்போது ரூ.260 முதல் 280 க்கு விற்பனையாகிறது. உரம், வெட்டுக்கூலி, போக்குவரத்துக்கு கூட கட்டுப்படியாக வில்லை
பொங்கல் திருநாள் நெருங்க நெருங்க விலை அதிகரிக்கும் என காத்திருக்கிறோம். புதுமண தம்பதிக்கு சீர்கொடுப்பதற்காத பலர் கட்டுக்கட்டாக கரும்புகளை வாங்கிச் செல்கின்றனர், என்றார்.