புதுச்சேரி: புதுச்சேரியில் வாடகை எடுத்த அபகரித்த கடையை, கோர்ட் உத்தரவின் பேரில் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூர் சித்தானந்த நகரை சேர்ந்தவர் சிவமணி. இவருக்கு சொந்தமான கடை, புதுச்சேரி காந்தி வீதியில் உள்ளது. இந்த கடையை 20 ஆண்டிற்கு முன் புதுச்சேரியை சேர்ந்த ரவிந்தரநாத் என்பவருக்கு வாடகை விட்டிருந்தார்.
ரவிந்தரநாத் வாடகை தராமல் காலம் கடத்தி வந்த தோடு, கடையை, கோட்டக் குப்பத்தை சேர்ந்த ஆரிஷ் என்பவருக்கு விற்றுள்ளார்.
இதனை அறிந்த சிவமணி கடையை மீட்டு தர வேண்டி, கடந்த 2016ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கடையை காலி செய்து சிவமணியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். ஆனால், ரவிந்தரநாத் கடையை காலி செய்து தரவில்லை.
அதனைத் தொடர்ந்து சிவமணி, கடந்த 2017ம் ஆண்டு ஐகோர்ட்டில் மீண்டும் தீர்ப்பு நிறைவேற்றல் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, இரண்டு நாட்களுக்குள் கடையை ஜப்தி செய்திட புதுச்சேரி கோர்ட்டிற்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அதன்பேரில் புதுச்சேரி முதன்மை உரிமையில் நீதிபதி ராஜசேகர் உத்தரவின்பேரில் நேற்று மாலை, பெரியக்கடை போலீஸ் பாதுகாப்புடன் அமீனாகள் ஜெய அம்பி, செல்வராஜ் ஆகியோர் காந்தி வீதியில் பூட்டியிருந்த கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பொருட்களை வெளியே வைத்து, கடையை மீட்டு சிவமணியிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.