விருதுநகர்--விருதுநகர் சூலக்கரை நான்கு வழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம் முன் மேம்பால பணியை துவங்காமல் 8 ஆண்டாக இழுத்தடிக்கப்படுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் 1985ம் ஆண்டு உதயமான பின் 350 ஏக்கரில் 36 துறை அலுவலகங்களும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் சூலக்கரையில் அமைந்தது. இதையடுத்து 2004ல் நான்கு வழிச்சாலையாக மாற்றம் பெற்றது.
இதில் தினசரி ஆயிரக்கணக்கான பொது மக்கள், அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். சாலையின் இருபுறங்களிலும் உள்ள சர்வீஸ் ரோட்டை கடந்து செல்வோர் விபத்துகளில் சிக்குவது வாடிக்கையானது.
2011ல் மாணிக்கம் தாகூர் எம்.பி., கலெக்டர் அலுவலகம் முன், சாத்தூர் படந்தால் விலக்கு பகுதியில் மேம்பாலம் அமைக்க மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெற்று ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
2014 ல் இரண்டு மேம்பாலங்களுக்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது போது பார்லி., தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்யட்டது.
தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மேம்பால பணிகள் முடக்கின. இதுகுறித்து மத்திய இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்த போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். ஆனாலும் பணி துவங்கவில்லை.
இதனால் விபத்துகள் அன்றாடம் அதிகரிக்கும் நிலையில் எப்போது மேம்பாலம் அமையும் என கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றுவோர், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை மண்டல திட்ட இயக்குனர் நாகராஜன் கூறியதாவது:
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் பாலம் அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். முறையான அனுமதி கிடைத்தவுடன் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு பெற்று பணி துவக்கப்படும், என்றார்.