சாத்துார்--நத்தத்துப்பட்டி- இருக்கன்குடி ரோட்டில் ரோட்டை ஆக்கிரமித்து விவசாயிகள் விளை பொருட்களை காய போட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகி படுகாயம் அடையும் அபாயம் உள்ளது.
சாத்தூரில் இருந்து நென்மேனி செல்லும் ரோட்டில் நத்தத்துப்பட்டி விலக்கு , இருக்கன்குடி விலக்கு சந்திக்கும் ரவுண்டானாவில் கிழக்கு பக்க ரோடு முழுவதையும் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை ரோட்டில் பரப்பி விவசாய களமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மல்லி, பாசிப்பயறு ,உளுந்து, எள்ளு, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், பயிர்களை ரோட்டில் பரப்பி வைத்து பஸ்கள் அதன் மீது ஏறிச் செல்லும்போது காய்கள் பிரிகின்றன.
கனரக வாகனங்கள் பயிர்கள் மீது எளிதாக சென்று விடும் நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோக்கள் ரோட்டில் காய வைக்கப்படும் பயிர்களால் சறுக்கி விழுந்து படுகாயம் அடைந்த வருகின்றனர்.
குறிப்பாக மக்காச்சோள பயிர்களை காய வைப்பதற்காக தற்போது ரோட்டில் பரப்பி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர் இதனால் ஒரு பக்கச் சாலையிலேயே வாகனங்கள் சென்று வரும் நிலை உள்ளது.
இதன் காரணமாக இருக்கன்குடி நத்தத்துப் பட்டி விலக்கில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடி வரும் நிலையில் ரோட்டில் பயிர்களை காய வைப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.