அருப்புக்கோட்டை- -சேதமான திருவண்ணாமலை தெரு ரோடு, ஓடையில் நேரிடையாக விடப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள் உட்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி அருப்புக்கோட்டை நகராட்சி 14 வது வார்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
இவ் வார்டில் வி.ஏ.எஸ்., திருவண்ணாமலை தெரு, மாகாளியம்மன் கோயில் புது தெரு, தெற்கு, வடக்கு முத்துசாமிபுரம் தெரு உட்பட 13 தெருக்கள் உள்ளன. வார்டு வழியாக செல்லும் பரசுராமபுரம் ஓடை 3 தெருக்களை கடந்து செல்கிறது. ஓடையில் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. ஓடையில் செப்டிக் டேங்க் கழிவுகள் நேரடியாக விடப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இந்த ஓடையில் கழிவுநீர் . மழை நீர் தனித்தனியாக செல்லும் வகையில் நவீனப்படுத்த வேண்டும்.
திருவண்ணாமலை தெருவில் ரோடு அமைத்து ஆண்டு கணக்கில் ஆகிவிட்டதால், கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. ரோட்டில் நடக்க மக்கள் சிரமப்படுகின்றனர். இங்கு ரோடு, வாறுகால் கட்ட வேண்டும். மெயின் ரோட்டில் இருந்து தெருக்களுக்கு நுழையும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலங்கள் உயரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது தடுமாறி செல்ல வேண்டியுள்ளது.
சிறு பாலங்களின் உயரத்தை குறைத்து கட்ட வேண்டும். விருதுநகர் மெயின் ரோட்டின் இருபுறமும் உள்ள வாறுகால்களில் மழைகாலத்தில், மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து ரோட்டில் ஓடுகிறது. வாறுகால்களில் அடைத்து கிடக்கும் மண், கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு சில தெருக்களில் செயல்படாமல் இருக்கும் பொது அடி குழாய்களை சரி செய்ய வேண்டும்.