சாயல்குடி-சாயல்குடி அருகே செவல்பட்டி, தரைக்குடி, உச்சிநத்தம், கொண்டுநல்லான் பட்டி, செஞ்சடை நாதபுரம், வெள்ளையாபுரம், முத்துராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மிளகாய் விவசாயத்திற்கு தேவையான எதிர்பார்த்த மழை பெய்யாததால் மிளகாய் சாகுபடியில் மகசூல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மிளகாய் விவசாயிகள் கூறியதாவது: நடப்பு ஆண்டில் பருவ மழை கைகொடுக்கவில்லை. இப்பகுதியில் குண்டு மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு தற்போது காய்த்து வருகிறது. பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் செடிகளில் மிளகாய் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மிளகாய் சாகுபடியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தும் பயனின்றி உள்ளது. எனவே மிளகாய் விவசாயத்தில் ஈடுபட்டு பாதிப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.