ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்ட சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவன ஊழியர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு போன்று தங்களுக்கும் 10 சதவீதம் ஊதிய மாற்றம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த 2022 நவ.,ல் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை நவ., முதல் அமல்படுத்தி உள்ளனர்.
அதே நேரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவில்லை. இதையடுத்து சுகாதாரத்துறை கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செந்தில் குமரன் தலைமையில் பணிபுரியும் இடங்களில் கோரிக்கை அட்டை அணிந்து 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கோரிக்கையை சுகாதாத்துறை நிறைவேற்ற தவறினால் ஜன. 24ல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், என மாவட்ட செயலாளர் சுரேஷ் கூறினார்.