பரமக்குடி-- பரமக்குடியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் நேற்று முதன் முறையாக பொங்கல் விழா நடந்தது. பரமக்குடி வக்கீல் சங்க தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் பசுமலை முன்னிலை வகித்தார். பொருளாளர் பிரபு வரவேற்றார். நீதிமன்ற வளாகத்தில் வரவேற்பு அறையின் முன்பு நீதிமன்ற ஊழியர்கள் பொங்கல் வைத்தனர்.
மாவட்ட கூடுதல் நீதிபதி சாந்தி, சார்பு நீதிபதி சதீஷ், குற்றவியல் நடுவர் பாண்டி மகாராஜா உள்ளிட்டோர் சூரிய பகவானுக்கு தீபராதனைகள் காண்பித்து வழிபட்டனர்.
இதில் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வக்கீல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன.