மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி, ஒரு லட்சம் ஏக்கரில் மிளகாய், சிறுதானியங்கள் 25 ஆயிரம் ஏக்கர், பயறு வகைகள் 10 ஆயிரம் ஏக்கர், எண்ணெய் வித்து 6000 ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. ஆண்டு தோறும் அக்., முதல் டிச., வரை வட கிழக்கு பருவ மழையை நம்பி 2 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாண்டு வட கிழக்கு பருவ மழை நவ., கடைசியில் துவங்கி அவ்வப்போது பெயரளவில் பெய்தது. இதனை நம்பி விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததால் சிக்கல், கடலாடி, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, தொண்டி, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழையின்றி மகசூல் இழப்பை சந்தித்துள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவழித்த விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறையினர், வேளாண் அலுவலர் அடங்கிய குழுவினர் 33 சதவீதம் மகசூல் பாதித்த பயிர்களை கணக்கெடுக்கின்றனர். இதில் ஒரு விவசாயிக்கு 2 ெஹக்டர் (5 ஏக்கர்) நிலத்திற்கான இழப்பீடு வழங்க அளவு கோல் நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் அதற்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிக்கல் வைகை பாசன சங்க தலைவர் பாக்கியநாதன் கூறுகையில், ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் வளர்ந்து நெல்மணிகள் கருகியுள்ளன. ரூ. பல லட்சம் மகசூல் பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ளோம். தற்போது 2 ேஹக்டேருக்கு மட்டும் வறட்சி நிவாரணம் கணக்கெடுப்பு நடத்துவது ஏமாற்றத்தை தருகிறது. மேலும் ஏக்கருக்கு ரூ.6000 தர உள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த அ.தி.மு.க.., ஆட்சியில் ரூ.8000 மழை நிவாரணம் வழங்கினர். எனவே முதல்வர் ஸ்டாலின் பாரபட்சம் இல்லாமல் மகசூல் பாதித்த அனைத்த நெற்பயிர்களையும் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.
ராமநாதபுரம், ஜன. 13-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை குறைவால் அறுவடை நேரத்தில் போதிய தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் மகசூல் இழப்பை சந்தித்துள்ளனர். தற்போது ஒரு விவசாயிக்கு 2 எக்டேருக்கு மட்டும் இழப்பீடு வழங்க கணக்கெடுத்து அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அதற்குமேல் சாகுபடி செய்த விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே முழுமையாக மகசூல் பாதிப்பை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை வறட்சி நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.