ராமநாதபுரம்-நாளை மறுநாள் (ஜன.15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதிக்கு தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கரும்பு விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் ஒரு கட்டுக்கு (15 கரும்பு) ரூ.100 வரை விலை அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் கொத்து, பூசணி ஆகியவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
ராமநாதபுரம் நகர், பாரதிநகர், சந்தை திடல், சின்னக்கடை வீதி ஆகிய பல இடங்களில் கட்டுக்கட்டாக கரும்பு விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர். 15 கரும்புகளை கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.500 வரை கரும்பின் உயரம், பருமன் அடிப்படையில் விற்கப்படுகிறது.
மஞ்சள் கொத்து ரூ.20 முதல் ரூ.30க்கு விற்கப்படுகிறது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.100 வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு கட்டு ரூ.300க்கு விற்றது. தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்து ரூ.400க்கு விற்பதாகவும், இன்றும், நாளையும் வியாபாரம் அதிகரிக்கும், என வியாபாரிகள் கூறினர்.