சிவகங்கை-சிவகங்கை நகராட்சி எல்கைக்குள் ரோட்டோரத்தில் வைத்துள்ள 50 க்கும் மேற்பட்ட இரும்பு பெட்டக கடைகளில், 15 கடைகள் எவ்வித அனுமதியின்றி செயல்படுவதாக கலெக்டரிடம் புகார் சென்றுள்ளது. சிவகங்கை நகராட்சியில் வார்டிற்கு ஒரு இரும்பு பெட்டிக்கடை வீதம் 27 வார்டு கவுன்சிலர்களுக்கு கடை ஒதுக்கப்பட்டது. இதில் 6 கவுன்சிலர்கள் ரோட்டை ஆக்கிரமித்து கடை வைக்க விரும்பாமல் ஒதுங்கி கொண்டனர். எஞ்சிய 21 கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் இரும்பு பெட்டிக்கடை திறந்து நகராட்சிக்கு மாதம் ரூ.1,800 முதல் 2000 வரை மட்டுமே கட்டணம் செலுத்தி, கூடுதல் வாடகைக்கு விட்டு ரூ.ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இதற்கிடையில் கமிஷனராக இருந்த பாலசுப்பிரமணியன், தீர்மானம் நிறைவேற்றி 13 இரும்பு பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி வழங்கினார். ஆனால், நகரில் அனைத்து தெருக்கள், ரோடுகளை ஆக்கிரமித்து புற்றீசல் போல் இரும்பு பெட்டிக்கடைகள் பெருகியுள்ளன. இது போன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி வைக்கப்பட்ட பெட்டிக்கடைகளுக்கு, மின்இணைப்பு கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி, மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதத்தில் வைத்துள்ள இரும்பு பெட்டி கடைகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். * விதிமீறல் கடைகள் அகற்றப்படும்: நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது, கலெக்டர் உத்தரவுப்படி நடத்திய ஆய்வில் 15 பெட்டிக்கடைகள் உரிய அனுமதியின்றி வைத்துள்ளது தெரிந்தது. அந்த கடைகள் குறித்தும், போக்குவரத்திற்கு இடையூறாக, தேசிய நெடுஞ்சாலைகளில் விதிமீறி வைத்துள்ள பெட்டிக்கடைகள் விபரத்தை தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளோம். பொங்கலுக்கு பின் போலீஸ், வருவாய், நகராட்சி அதிகாரிகள் இணைந்து விதிமீறல் கடைகள் பாரபட்சமின்றி அகற்றப்படும், என்றார். ////