காரைக்குடி-காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி ரயில்வே கேட்டில் வாகனம் மோதியதால், ரயில்வே கேட் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு நேற்று காலை திருச்சி ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் வந்து நின்றது. ரயில், புறப்பட தயாரான நிலையில் அரியக்குடி ரயில்வே கேட் மூடுவதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டது. ரயில்வே கேட் அலாரம் ஒலித்து கேட் மூட முற்படும் போது சரக்கு வாகனம் ஒன்று கேட்டை தாண்டுவதற்காக வேகமாக சென்றது.
இந்த வாகனம் ரயில்வே கேட்டில் மோதியதால் ரயில்வே கேட் உடைந்தது. ரயில்வே போலீசார் அவசர அவசரமாக, ரயில்வே கேட்டை, ஓரமாக தூக்கி வைத்து விட்டு ரயில் செல்வதற்கு தயார்படுத்தினர். இதனால் ரயில் புறப்பட 20 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. கேட் வேலை செய்யாததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்றது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த காரைக்குடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாலாஜி 32 என்பவரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.