காரைக்குடி -நிதிநிலை போதுமானதாக இல்லை. ஒவ்வொரு வேலையாக முடித்த பின்பே அடுத்த வேலை தொடர்ந்து கொடுக்க முடியும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
காரைக்குடி நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
சேர்மன் முத்துத்துரை தலைமையேற்றார். துணை சேர்மன் குணசேகரன் ஆணையாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
திவ்யா 28வது வார்டு; கணேசபுரம் மாரியம்மன் கோவில், சந்தன முத்து மாரியம்மன் கோவில் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும். பல பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை.
அமுதா 29வது வார்டு: வெங்கடாசலம் தெரு, 4 வது குறுக்குத்தெரு பகுதியில் பல்வேறு பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு இதுவரை பணி நடைபெறவில்லை. அப்பகுதியில் பள்ளிகள் உள்ளதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது.
பூமிநாதன் 31 வது வார்டு: தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள சம்பை ஊற்று குடிநீரில் குப்பை கழிவு கலக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தெய்வானை 4வது வார்டு: செக்காலை சிவன் கோயிலில் கழிவுநீர்க் கால்வாய் பாதியில் நிற்கிறது. குப்பை சேகரிப்பவர் குப்பையை முறையாக வாங்குவதில்லை.
சேர்மன் முத்துத்துரை கூறுகையில்; காரைக்குடி நகராட்சியில், 600 தெருவிளக்குகள் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கு ரூ.3.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரஸ்தா பகுதியில் குடிநீர் போர்வெல் அருகே காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பல வார்டுகளுக்கு பணிகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிநிலை போதுமானதாக இல்லை. ஒவ்வொரு வேலையாக முடித்த பின்பே அடுத்த வேலை தொடர்ந்து கொடுக்க முடியும், என்றார்