திருப்புவனம்-திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தினமலர் செய்தியை அடுத்து கூடுதல் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.'
மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்த 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாதந்தோறும் காணிக்கை எண்ணப்படும், கடந்த மூன்று மாதமாக உண்டியல்கள் திறக்கப்படாததால், உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன. இதில் ஒருசில உண்டியல்களில் காணிக்கை செலுத்த முடியாவண்ணம் துணிகளை வைத்து கட்டியுள்ளனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது நிரம்பிய உண்டியல்களுக்கு அருகிலேயே கூடுதலாக ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் கூறுகையில்:
திருப்புவனம் பகுதியில் ஏற்கனவே கோயில் உண்டியல்களில் காணிக்கை பணம் திருடு போய் உள்ள நிலையில் கூடுதலாக எந்த வித பாதுகாப்பும் இன்றி உண்டியல்களை வைத்துள்ளனர். ஏற்கனவே நிரம்பி உண்டியல்களையும் வெறும் துணியால் மூடிவைத்துள்ளனர். அதில் பணம் திருடு போகவும் வாய்ப்புள்ளது. எனவே உண்டியல் காணிக்கையை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.