மதுரை-'தமிழ் இலக்கியங்களை படிக்க படிக்க ஆயுள் அதிகரிக்கும்' என கம்ப ராமாயண சிறப்பு சொற்பொழிவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசினார்.
மதுரைக் கல்லுாரி, மதுரைக் கம்பன் கழகம் சார்பில் நடந்த இந்நிகழ்விற்கு கம்பன் கழகத் தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுரேஷ் வரவேற்றார். செயலாளர் நடன கோபால், கம்பன் கழகச் செயலாளர் புருேஷாத்தமன் முன்னிலை வகித்தனர்.
சாலமன் பாப்பையா பேசியதாவது: கம்பராமாயணத்தில் முக்கியமாக சுந்தரகாண்டத்தை நாம் படிக்க வேண்டும். நான் படிக்கும் காலத்தில் தமிழ்த்துறையை எடுத்து படித்ததால் ஏளனமாக பார்த்தார்கள். இன்று அந்த தமிழ் தான் என்னை உயர்த்தியுள்ளது. இந்த விஞ்ஞான கல்வி காலகட்டத்திலும் கூட மாணவர்கள் கம்பனை கற்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கம்பராமாயணத்தில் சொல்லாதது ஏதுமில்லை. தமிழ் இலக்கியங்களை படிக்க படிக்க நம் ஆயுள் கூடும். கம்பராமாயணம் நமக்கான சொத்து. அதை போற்றி பாதுகாப்பது நம் கடமை. அதை படிப்பதால் நமக்குள் இறை பக்தி கூடும். துணிச்சலை உண்டாக்கும். இவ்வாறு பேசினார்.கம்பராமாயணத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உதவி பேராசிரியர்கள் லாவண்யா, கண்ணன், காந்திமதி ஒருங்கிணைத்தார்கள். கண்ணதாசன் நன்றி தெரிவித்தார்.