சோழவந்தான்-விக்கிரமங்கலம் ஊராட்சி நடுவூர் காலனி பகுதியில் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பால் இக்காலனி மக்கள் உயிர் பயத்தில் நடுங்குகின்றனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்காலனி வழியே 3 மீ., அகலம் 1500 மீ., நீளத்திற்கு திருமங்கலம் தொட்டிப் பாலம் பிரிவு பாசன வாய்க்கால் செல்கிறது.
இவ்வாய்க்கால் மூலம் 100 ஏக்கர் வரை சாகுபடி நடக்கிறது. வாய்க்காலை சிலர் தகர கொட்டகை, கழிவறை கட்டடம் என ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாய்க்கால் வழியே தண்ணீர் செல்லமுடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி நிற்கிறது.
பாண்டிப்ரியா: பாசன வாய்க்காலின் குறுக்கே தாழ்வான சிறுபாலங்கள் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வாய்க்கால் வழியே செல்ல முடியாமல் உடைந்த தடுப்புச்சுவரை தாண்டி குடியிருப்புக்குள் தேங்கி நிற்பதால் குடும்பத்தோடு தவித்தோம். செல்லம்பட்டி ஊராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சாந்தா: இப்பகுதியின் வடக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் முப்போக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வயலோர பகுதிகளில் உள்ள வீடுகளின் சுவரில் ஈரம் தேங்கி விரிசல் ஏற்பட்டு விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. நாங்கள் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுகுறித்து பி.டி.ஓ.விடம் மனு கொடுத்தும் மெத்தனம் காட்டி வருகிறார்கள்.
ஊராட்சி தலைவர் கலியுகநாதன்: இவ்வூரில் பாசன வாய்க்காலை மறுசீரமைப்பு பணி செய்ய மனு கொடுத்துள்ளேன். தடுப்புச்சுவர் அமைப்பது பற்றி அதிகாரிகளிடமும் விவசாய நில உரிமையாளர்களிடம் பேசியுள்ளேன். மழைக்காலம் முடிந்து, தண்ணீர் சென்றுகொண்டே இருந்ததால் அளவீடு பணியே பாதியில் நிறுத்தப்பட்டது. தண்ணீர் வராமல் இருக்கும் போது அனைத்து பணிகளும் கூடிய விரைவில் இப்பகுதி மக்களுக்கு ஏற்றவாறு செய்து கொடுக்கப்படும் என்றார்.