ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி பகுதியில் விளைச்சல் தராத நாட்டு ரக சோள பயிர்களை விவசாயிகள் கால்நடை தீவனமாக இருப்பில் வைக்கின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் இந்தாண்டு மானாவாரியாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் விதைக்கப்பட்ட பயிர்கள் தற்போது அறுவடை நிலைக்கு வந்துள்ளன.
சிறு தானிய சாகுபடியில் பல கிராமங்களில் விவசாயிகள் நாட்டு ரக வெள்ளை சோளம் விதைப்பு செய்தனர். விதைப்புக்கு பின் அடுத்தடுத்த பெய்த மழையில் பயிர்கள் செழித்து வளர்ந்தது. கதிர் பிடிக்கும் நிலையில் பெய்த சாரல் மழையால் விளைச்சல் பாதித்தது.
தற்போது அறுவடை பருவத்தை அடைந்த பயிர்களில் கதிர்கள் வளர்ச்சி இன்றி கருத்து விட்டன.
விவசாயிகள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டில் அனைத்து பகுதிகளும் போதுமான மழை பெய்துள்ளது.
மானாவாரி பயிர்களில் சோளப் பயிர் வளர்ச்சிக்கு உரிய காலத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் விளைச்சல் பாதித்துள்ளது.
கடந்த காலங்களில் வறட்சியால் விளைச்சல் பாதித்தது. இந்தாண்டு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவை விட கூடுதல் மழையால் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது விளைந்துள்ள பயிர் அறுவடைக்கு பின் கால்நடைகளின் தீவனத்திற்கு இருப்பில் வைக்கப்படும்., என்றனர்.