தேனி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொண்டு நிறுனங்கள் பரிந்துரையில் வங்கிகளில் தலா ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடன் பெறுகின்றனர்.
கடன்பெற்ற சில நாட்கள் தவணை சரியாக செலுத்தினர். கொரோனாவால் வேலை வாய்ப்பு, தொழில் முடங்கி பெண்கள் வருமானம் பாதித்தது. அதனால் தவணை முறையாக செலுத்தாமல் முடங்கினர். வங்கி கணக்கு மூலம் வரவு செலவு செய்த உறுப்பினர்கள் சிலர் அவசர தேவைக்காக அதே வங்கியில் நகைகளை அடகு வைத்தனர். ஒரு ஆண்டுக்கு பின் நகைக்கு பணம் செலுத்தி மீட்க சென்றால் வங்கியினர் சம்மந்தப்பட்வரின் நகை திரும்ப இயலாது. குழுவிற்கு வழங்கிய அனைவரின் கடனை திரும்ப செலுத்தினால்தான் நகையை மீட்க முடியும் என கூறி நகை கடன் கணக்கை முடக்கி உள்ளனர்.
சூழலை உணர்ந்த சிலர் தாங்கள் பெற்ற கடனை செலுத்தியும் அடகு நகைகளை வழங்க வங்கி நிர்வாகம் மறுக்கிறது. கடன் பெற்ற சில உறுப்பினர்கள் உடனே கடனை திரும்ப செலுத்த இயலாமல் உள்ளனர். இதனால் பல குடும்பங்களில் பிரச்னை விஸ்வரூபமாக உள்ளது.
நகைகளை மீட்க முடியாததால் பெண் பிள்ளைகளின் திருமணம் தடைபட்டும், பல பெண்கள் குடும்ப வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது. இதற்கு தீர்வு காண முடியாமல் பல பெண்கள் விரக்தியில் உள்ளனர்.
இப் பிரச்னையின் தீர்வுக்கு மாவட்ட நிர்வாகம் வங்கியாளர்கள்,கடன் பெற்று தந்த தொண்டு நிறுவனங்கள், கடன் பெற்ற மகளிர் குழு பிரதிநிதிகளுடன் ஆலோசித்து குடும்ப பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண வழிகாட்ட வேண்டும் என பெண்கள் கோரியுள்ளனர்.
இது குறித்து முன்னோடி வங்கி அதிகாரி மோகன்குமார் கூறுகையில், சுய உதவிக்குழுவினர் கடன் பெறும் போது சில விதிகளுக்கு உட்படுவதாக கையெழுத்திட்டிருப்பார்கள். அதில் குழுவினர் பெற்ற கடனுக்கு அனைவரும் பொறுப்பு என்ற ரீதியில் பெற்றிருக்கலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் வங்கிகளில் நகையை திருப்பி வழங்காதற்கான காரணம் கேட்டு கடிதம் வழங்கலாம்.
வங்கி கூறும் பதில் திருப்தி இல்லை எனில் வங்கி மண்டல, பிராந்திய அலுவலகங்களுக்கு மேல் முறையீடு செய்யலாம். அதிலும் திருப்திகரமாக இல்லை எனில் 30 நாட்களுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் குறைதீர் தீர்ப்பாயத்தில் ஆன்லைன் மூலம் மனு செய்யலாம், என்றார்.