தேவதானப்பட்டி--மஞ்சளாறு அணை அருகே ராசிமலையில் கட்டி முடிக்கப்பட்ட 32 வீடுகள் ஒன்றரை ஆண்டுகளாக பயனாளிகளுக்கு வழங்காதால் குடியிருக்க வீடு இன்றி ஓலை குடிசையில் பழங்குடியின மக்கள் சிரமம் அடைகின்றனர்.
தேவதானப்பட்டி பேரூராட்சி 5வது வார்டு மஞ்சளாறு அணையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ராசிமலை காலனி உள்ளது.
இங்கு 80 பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் தனியார் இடத்தில் ஓலை குடிசை அமைத்து அதன் மீது கிழிந்த தார்ப்பாய்களை மேற்கூறையாக போர்த்தி வெயிலில் வாடியும், மழையில் நனைந்து அவதிப்பட்டு வருகின்றனர். 2019-ல் குடிசை மாற்று வாரியம் சார்பில் 32 வீடுகள் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ரூ.3.84 கோடியில் கட்டப்பட்டது. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் தேவதானப்பட்டி பேரூராட்சி சாக்கடை அமைக்கும் பணியை மேற்கொண்டது.
மின் இணைப்பைத் தவிர அனைத்து பணிகளும் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாக வீடுகளை வழங்காமல் பூட்டி வைத்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை இந்தப் பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பழங்குடியினர் கருத்து:
குடி சையி ல் குழந்தைகளுடன் சிரமம்
எம்.குமார், அகமலை: டம்டம் பாறை மலைப்பகுதிகளில் முன்னோர் உயரமான பாறைகளுக்கு நடுவே வசித்தனர். எனது தந்தை கூரை அமைத்து வசித்தார். எங்கள் காலத்திலாவது வீட்டில் வசிப்போம் என எதிர்பார்த்தோம். அரசு எங்களுக்கு வழங்கிய வீடுகள் கண்முன்னே கட்டி பூட்டி வைத்துள்ளனர்.
மழைக்கு ஒழுகும் குடிசையில் குழந்தையுடன் சிரமப்படுகிறோம். கடந்த வாரம் மலைப்பாம்பு குடிசைக்குள் வந்துவிட்டது.
அனைவரும் பிடித்து மஞ்சளாறு அணை பகுதியில் விட்டோம். ஏற்கனவே கொசுக்கடியில் வாழும் எங்களுக்கு இந்த ஆண்டிலாவது விடிவுகாலம் பிறக்க வேண்டும்.
வீடுகளை ஒப்படைக்க வேண்டும்
கே.ஜோதி: ஒருபுறம் புதிய வீடு கட்டி முடித்து எவ்வித பயன்பாடு இன்றி முடங்கியுள்ளது. மறுபுறம் நாங்கள் வசிக்க வீடு இல்லாமல் சிரமம் அடைகிறோம். வீடுகளை இன்னும் வழங்கவில்லை. ஆனால் அதற்குள் ரோடு போடுவதற்கு ஜல்லிகற்கள், தார் டின்கள் வந்துவிட்டது. வீடு எங்களுக்கு வழங்கியதற்கு பிறகு ரோடு போடும் பணியை துவங்க வேண்டும்.
செயல்படாத ரேஷன் கடை
எம்.தினேஷ்: வாரம் இரு முறை நடமாடும் ரேஷன் கடை செயல்படும் என அதிகாரிகள் கூறி பல மாதங்களாகியும் ரேஷன் பொருட்கள் வரவில்லை. 7 கிலோமீட்டர் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகிறோம்.
பல வேலைகளில் எங்களுக்கு உணவாக தேனும், கிழங்கும் மட்டும் கிடைக்கிறது. பனிக்காலங்களில் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.-