புதுடில்லி : புதுடில்லி - புனே இடையிலான, 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி வாயிலாக நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுடில்லியில் இருந்து, மஹாராஷ்டிராவின் புனே நகருக்கு செல்வதற்காக, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தின் பயணியர் விமானம், 'எஸ்.ஜி., 8938' நேற்று மாலை தயாராக இருந்தது.
அப்போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தார். உடனடியாக விமானம் முழுதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
சோதனை முடியும் வரை, பயணியர் அனைவரும் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக அமர வைக்கப்பட்டனர். மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.