சென்னை : ''தமிழகத்தில் தரமற்ற உணவு பொருட்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்தவர்களிடம், 8.35 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், உணவு பாதுகாப்பு துறையின் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:
உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்க்கவும், உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், சென்னை, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில், ஆறு உணவு பகுப்பாய்வு கூடங்கள் உள்ளன.
இவற்றில், 2021 முதல் 2022 வரை, 34 ஆயிரத்து, 980 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், 2,266 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது; 7,405 உணவு மாதிரிகள் தரமற்றதாகவும் கண்டறியப்பட்டு, 6,542 வழக்குகள் தொடரப்பட்டது. இதன் வாயிலாக, உரிமையியல் நீதிமன்றம் வாயிலாக, 6.17 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
குற்றவியல் நீதிமன்றத்தில், 1,264 வழக்குகள் தொடரப்பட்டு, 2.18 கோடி ரூபாய் என மொத்தம், 8.35 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, கோவை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்காக, 1.92 கோடி மதிப்பில், நான்கு நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த வாகனங்களில், உணவில் கலப்படம் கண்டறியும் வசதிகள், விளக்க படங்கள்உள்ளன.
மாநிலம் முழுதும் அட்டவணைப்படி, இவ்வாகனங்கள் பஜார் பகுதி மற்றும் குடிசை பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள உணவுகளின் தரத்தை ஆய்வுசெய்யும். பொதுமக்கள் தரமற்ற உணவு பொருட்கள் குறித்து, 104, 94440 42322 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.