மதுரை :'சிவகங்கை சிங்கம்புணரி மல்லாக்கோட்டை கிராமத்தில் கோயில்களில் தைப்பொங்கல் விழாவில் யாருக்கும் முதல்மரியாதை அளிக்க கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை பாலசுந்தரம் தாக்கல் செய்த மனு:
கிராமத்தில் சண்டிவீரன்சுவாமி கோயில், பெரியகோட்டை முத்தையனார் கோயில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் தை திருவிழாவை முன்னிட்டு கொடிவளவு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
விழாவின்போது யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. சில ஆண்டுகளாக சசிபாண்டிதுரை என்பவர் தனக்கு முதல் மரியாதை, சிறப்பு மரியாதை செய்யுமாறும் கூறி வருகிறார். விழாவின்போது அவருக்கு தலைப்பாகை கட்டி கையில் குடை ஏந்தியவாறு அவரது அடியாட்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்.
பல்வேறு சமூகத்தினர் ஒன்றாக இணைந்து கொண்டாடும் இவ்விழாவில் அவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை வழங்குமாறு பூஜாரிகளை வற்புறுத்துகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல. தடை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'இது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிதல்ல. உயர்நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. கோயிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.
கோயிலுக்குள் அனைவரும் சமமானவர்களே என அந்த உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவுகள் இந்த வழக்குக்கும் பொருந்தும். தங்களது அந்தஸ்தை சிறப்பாக காட்டிக்கொள்ளும் வகையிலான அடையாளங்கள் இருக்கக்கூடாது.
சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. விழாவை அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.