மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இன்று (ஜன.,13) ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அவனியாபுரம் முனியசாமி, கல்யாணசுந்தரம் தனித்தனியே தாக்கல் செய்த மனு:
அவனியாபுரத்தில் ஜன.15ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அவனியாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் பட்டியல் சமூகத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்தாண்டு நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட சில சமூகத்தினரை மட்டும் வைத்து நடத்தும் சூழல் உள்ளது. பட்டியல் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுப்படி அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'கிராமத்தின் அனைத்து சமூகத்தினரை கொண்ட ஆலோசனைக் குழு தான் காளைகள் தேர்வு, பரிசு வழங்குவது விழா நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றன. அரசுத் தரப்பில் மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதற்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக பலகட்ட சமாதான கூட்டம் நடத்தும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்தாண்டு அவனியாபுரத்தில் ஆலோசனைக்குழு அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசு அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு நடத்துகிறது. இதற்கான ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைப்பது தொடர்பான கூட்டத்தை ஆர்.டி.ஓ., தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடத்த வேண்டும்.
இதில் தீர்வு ஏற்பட்டால் அவ்வாறு குழுவை அமைக்கலாம். இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு குழுவில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரையும் சேர்த்து நடத்த வேண்டும். கூட்டத்தில் பங்கேற்கும் தரப்பினரால் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படக் கூடாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.