வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சரியான நேரத்துக்கு விமானங்களை திட்டமிட்டபடி இயக்குவதில் கோவை விமான நிலையத்துக்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது; 'டாப் 20' விமான நிலையங்களில் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே விமான நிலையம் கோவை மட்டுமே.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிகளவு விமானங்களையும், பயணிகளையும் கோவை சர்வதேச விமான நிலையம் கையாண்டு வருகிறது. இங்கிருந்து தினமும், 22 உள்நாட்டு விமானங்களும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு இரு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
புறப்பாடு, வருகையை கணக்கிடுகையில், உள்நாட்டு விமானங்கள் மாதத்துக்கு, 1,220லிருந்து 1,330, வெளிநாட்டு விமானங்கள் மாதம், 105--110 என்ற எண்ணிக்கையில் உள்ளன. பயணிகள் வருகையானது மாதத்துக்கு, 1.94 லட்சம் வரை உள்நாட்டுப் பயணிகளும், 16 ஆயிரத்து 800 வரை வெளிநாட்டு பயணிகளும் உள்ளனர்.
கடந்த ஏப்., முதல் நவம்பர் வரை, 846 சர்வதேச விமானங்கள் உட்பட மொத்தம், 11 ஆயிரத்து 560 விமானங்களை இந்த விமான நிலையம் கையாண்டுள்ளது. இதே காலகட்டத்தில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 385 வெளிநாட்டுப் பயணிகளும், 15 லட்சத்து 56 ஆயிரத்து 826 உள்நாட்டுப் பயணிகளும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.
முழு வீச்சில் விரிவாக்கம்
மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கான முக்கிய வான்வழி போக்குவரத்து கேந்திரமாகவுள்ள கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, கொங்கு குளோபல் போரம், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உள்ளிட்ட தொழில் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
![]()
|
கணக்கெடுப்பு
இந்நிலையில், கோவை விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையிலான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த சர்வதேச விமான பயணிகள் அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், திட்டமிட்டபடி விமானங்களை இயக்கும் விமான நிலையங்களை பற்றி கணக்கெடுப்பு (OAG-Official Airline Guide) நடத்தியுள்ளது.
'டாப் 20'
இதில் இடம் பெற்றுள்ள 'டாப் 20' விமான நிலையங்களில், இந்தியாவிலிருந்து கோவை சர்வதேச விமான நிலையம் மட்டுமே இடம் பிடித்துள்ளது.
அதாவது விமானங்களை ரத்து செய்யாமல், சரியான நேரத்துக்கு திட்டமிட்டபடி இயக்குவதன் (OTP- On Time Performance) அடிப்படையில், இந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. அதில், கோவை சர்வதேச விமான நிலையம், 0.54 சதவீத அளவில் மட்டுமே, விமானங்களை ரத்து செய்து, இந்த பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது.
வரவேற்பு
கோவையில் எப்போதும்நிலவும் இதமான சீதோஷ்ண நிலையும், விமானங்களுக்கு இருக்கும் வரவேற்பும் இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
விரிவாக்கத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணியை விரைவாக முடித்து, ஓடுதளத்தின் நீளத்தை அதிகரித்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும்பட்சத்தில், கோவை சர்வதேச விமான நிலையம், இன்னும் பல சாதனைகளை எட்டிப்பிடிக்கும் என்பது நிச்சயம்.
-நமது சிறப்பு நிருபர்-