அவிநாசி : அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் முளைக்காத வகையில் பாதுகாப்பு 'வளையம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவிநாசி பேரூராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்ட் மார்கெட் வளாகத்தில், கடைகள் செயல்பட்டு வந்தன; அங்கு வணிக வளாகம் கட்டும் பணி துவங்கியதால், அங்குள்ள கடைகள், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தவிர, அவிநாசி சேவூர் ரோட்டில், வேளாண்துறை அலுவலக முகப்பில் ஓரிரு காய்கறி கடைகள், சாலையோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பழக்கடை, பூக்கடை, துணி வியாபாரம் என, சில கடைகள் இருந்தன.
கடந்த ஓராண்டாக, சாலையோர கடைகள் புற்றீசல் போல் முளைக்கின்றன. அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, பனியன், ஆயத்த ஆடை என, பல்வேறு பொருட்களை கடை விரித்து விற்கின்றனர். சாலையோரம் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை முழுக்க, தள்ளுவண்டி கடைகள் மற்றும் கட்டில் விரித்து பலரும் வியாபாரம் செய்வதால், மக்கள், நடைபாதையை பயன்படுத்த முடிவதில்லை. அதோடு, நடைபாதையையொட்டி வாகனங்களை பார்க்கிங் செய்யவும் முடியாததால், வாகன ஓட்டிகள், நடைபாதை இடையே தகராறு ஏற்படுகிறது.
அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலக முகப்பிலும் ஏராளமான காய்கறி கடைகள் முளைத்ததால், இடையூறு ஏற்பட்டது. அலுவலக முகப்பில் கடைகள் முளைப்பதை தவிர்க்க, அலுவலகத்தை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில், கவனம் செலுத்தும் எம்.எல்.ஏ., தனபால், ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தவும், ஆக்கிரமிப்பு கடைகளால் நகரின் கட்டமைப்பு பாதிக்கப்படுவதை கண்வுகொள்ளாமல் இருப்பதாகவும், சர்ச்சை கிளம்பியுள்ளது. சாலையெங்கும் முளைக்கும் காய்கறி, கடைகளால், பஸ் ஸ்டாண்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் பாதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
------
அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகத்தைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பேரூராட்சியில் பாதசாரிகள், பொதுமக்களுக்கு இடையூறாக, அனுமதியின்றி ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கான, தீர்மானம், பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; போலீசாரின் ஒத்துழைப்பு கேட்டு, கடிதம் வழங்கப்பட்டுள்ளது,” என்றனர்.