பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் தயாரிக்கப்படும். கிராமங்களில் பானைகளிலும், நகரங்களில் குக்கரில் பொங்கல் வைக்கப்பட்டு கரும்பு வைத்து தெய்வ வழிபாடு நடத்தப்பட்டு விமரிசையாகக் கொண்டாடப்படும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனிப்புகளை அறவே தவிர்த்து தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வர். இவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்கிற கேள்வி எழலாம். அதற்கான விடை இதோ...
பொதுவாக சர்க்கரை பொங்கல் செய்ய நாட்டு வெல்லம் பயன்படுத்தப்படும். வட மாநிலங்களில் இதனை ஜாகரி என்பர். கரும்பில் இருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் இந்த வெல்லம் பலவித ரசாயானங்கள் சேர்க்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை ஒப்பிடும்போது உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இதனாலேயே வெள்ளை சர்க்கரையை விட சற்று கூடுதல் விலை கொண்ட ஜாகரி பவுடர் பால், காபி, டீ உள்ளிட்ட பானங்களில் சுவை சேர்க்க கலக்கப்படுகிறது.
![]()
|
வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டு வெல்லத்தால் உருவான இந்த பவுடர் சுவையிலும் நன்றாக இருப்பதாலும் உடல் அரோக்கியத்தை பாதிக்காததாலும் தற்போது மக்கள் பலர் இதனை சூப்பர் மார்கெட்டுகளில் வாங்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் தயாரிக்க இந்த ஜாகரி பவுடர் கொண்டு வெல்லப் பாகு தயாரிக்கப்படுகிறது.
இந்த ஜாகரி சர்க்கரைப் பொங்கல் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட ஏற்றது என பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் ஜாகரி பவுடரும் நாள்பட்ட நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதுதான் உண்மை. வெள்ளை சர்க்கரை அளவுக்கு அதிக கிளைசிமிக் இண்டெக்ஸ் இதில் இல்லை என்றபோதும் இது ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்து மிளகு கலந்த வெண்பொங்கல் சாப்பிடுவது நல்லது. அல்லது மிகக் குறைவான அளவு பொங்கல் சாப்பிடுவது பாதுகாப்பானது.