புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் நேற்று(ஜன.,12) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி., ராகுல் , ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பல தலைவர்கள் சரத் யாதவ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு அமித்ஷா கூறுகையில் சரத் யாதவின் மறைவு நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் பேரிழப்பு. அவரது வாழ்க்கை முழுவதும் சாமானிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்னைகளை எழுப்பினார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த நேரத்தில் தைரியத்தை கடவுள் அளிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு ராகுல் கூறுகையில், சரத் யாதவிடமிருந்து அரசியல் குறித்து நிறைய கற்று கொண்டேன். அவர் மறைவு என்னை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனது தந்தையுடன் மரியாதை கலந்த நட்பை கொண்டிருந்தார். இவ்வாறு ராகுல் கூறினார்.