வாரணாசி: உலகின் மிக நீண்டதூரம் பயணிக்கும் சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று (ஜன.,13) துவக்கி வைத்தார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து, வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகர் வரை செல்லம் உலகின் மிக நீண்டதூரம் பயணிக்கும் சொகுசு கப்பல் சேவையை, டில்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று (ஜன.,13) துவக்கி வைத்தார். ‛எம்.வி.கங்கா விலாஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல் இரண்டு நாடுகளில் 27 நதிகள் வழியாக 52 நாட்களில் 3,200 கி.மீ பயணிக்கும்.

ரூ.68 கோடி மதிப்பீட்டில் கிட்டத்தட்ட நடமாடும் ஐந்து நட்சத்திர ஹோட்டலாக கருதப்படும் இக்கப்பல், 3 அடுக்குடன், 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு நேரத்தில் 36 பயணிகள் வரை பயணிக்கலாம். இதில் பயணிக்க ஒரு பயணிக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் என்றும், 52 நாட்களுக்கு சேர்த்து ரூ.20 லட்சம் எனவும் கூறப்படுகிறது.
பீஹாரின் பாட்னா, ஜார்க்கண்டின் ஷாஹிகஞ்ச், மேற்குவங்கத்தின் கோல்கட்டா போன்ற முக்கிய நகரங்களில் உள்ள உலக பாரம்பரிய தளங்கள், தேசிய பூங்காக்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களை இந்த கப்பல் மூலமாக சென்று கண்டுகளிக்கலாம். மேலும், வாரணாசியின் கங்கை நதிக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, ‛டென்ட் சிட்டி' என்ற இடத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது: கங்கை நதியில் உலகின் மிக நீண்டதூர பயண கப்பல் சேவை துவங்கியிருப்பது ஒரு முக்கிய தருணமாகும். இன்றைய தினத்தில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான பல உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இது கிழக்கு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தும். ‛எம்.வி. கங்கா விலாஸ்' கப்பலில் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தியாவை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது; இதயத்திலிருந்து மட்டுமே அனுபவிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.