ஏற்காடு, ஜன. 13-
தண்ணீர் எடுத்தபோது பொக்லைன் கிணற்றில் விழுந்ததில் கட்டட தொழிலாளி பலியானார். டிரைவர் உயிர் தப்பினார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. இவர், சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலத்தை சேர்ந்த பானுமதியை திருமணம் செய்து கொண்டு அதே கிராமத்தில் வசிக்கிறார். கொல்லிமலையை சேர்ந்தவருக்கு சொந்தமான பொக்லைனில் டிரைவராக பணிபுரிகிறார். சில நாளாக, மாரமங்கலத்தில் நடந்து வரும் அரசு பள்ளி கட்டட கட்டுமானப்பணிக்கு பொக்லைன் ஓட்டி வருகிறார். அங்கு கட்டட தொழிலாளியாக, மாரமங்கலத்தை சேர்ந்த கரியமலை, 63, இருந்தார்.
நேற்று காலை, 11:00 மணிக்கு சதீஷ்குமார், மாரமங்கலத்தில் செந்திலுக்கு சொந்தமான கிணற்றை ஒட்டி பொக்லைனை நிறுத்தி அதன் பக்கெட் மூலம் தண்ணீர் எடுக்க முயன்றார். கரியமலை, பொக்லைனில் அமர்ந்திருந்தார். அப்போது கிணற்றோரம் இருந்த கல்லுக்கட்டு சுவர் சரிந்து, பொக்லைனுடன் இருவரும் கிணற்றில் விழுந்தனர். சதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்ததால் மேலே வந்துவிட்டார். கரியமலை பொக்லைன் அடியில் மாட்டிக்கொண்டார். ஏற்காடு போலீசார், தீயணைப்பு துறையினர், மக்களுடன் இணைந்து கரியமலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகளவில் சேறு இருந்ததால் சிரமம் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின் அவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஏற்காடு போலீசார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.