செய்தி சில வரிகளில்
விவேகானந்தர் பிறந்தநாள் விழா
சேலம்: விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி, சேலம் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் மாநகர பா.ஜ., இளைஞர் அணி சார்பில் நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். அதில் விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் விவேகானந்தரின் சொற்பொழிவு அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. மாநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கவுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.
நெடுஞ்சாலை பொறியாளர் ஆய்வு
ஓமலுார்: சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம். இவர், ஓமலுாரில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை பணியான தார்ச்சாலை, தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். சித்தர்கோவில் சாலையில் அதன் தரம், கணத்தின் அளவு மாதிரியை எடுத்து பார்வையிட்டார். சாலை பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். இடைப்பாடி கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரம் உடனிருந்தார்.
சொர்க்கவாசல் அடைப்பு
சேலம்: சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த மாதம், 22ல் தொடங்கியது. தொடர்ந்து கடந்த, 2ல் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, சொர்க்கவாசல் வழியே வெளியே வந்தனர். நேற்று மாலை சொர்க்கவாசல் அடைக்கும் நிகழ்வு நடந்தது. அதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மேட்டூர் நீர்மட்டம்
112 அடியாக சரிவு
மேட்டூர், ஜன. 13-
மேட்டூர் அணை நீர்மட்டம், 112.89 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்
அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில்
பெய்து வரும் மழைக்கேற்ப மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
நேற்று முன்தினம் 1,327 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று சற்று
அதிகரித்து, 1,547 கனஅடியாக வந்தது. அணையில் இருந்து டெல்டா
பாசனத்துக்கு, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
தவிர
கிழக்கு, மேற்கு கால்வாய் வழியே, 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், நேற்று முன்தினம், 113.54
அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று, 112.89 அடியாக சரிந்தது. அதற்கேற்ப
நீர் இருப்பு, 82.58 டி.எம்.சி.,யாக காணப்பட்டது.
போக்குவரத்து அலுவலர் ஆய்வு
ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டை தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் அலுவலர்கள், ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். பின், குறைகள், சரிசெய்ய வேண்டியவை குறித்து, நகராட்சிக்கு அறிக்கையாக வழங்கப்படும் என, போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
பீர் பாட்டிலால் குத்து: தொழிலாளி 'அட்மிட்'
சேலம், ஜன. 13-
சேலம், சந்தைப்பேட்டையை சேர்ந்தவர்கள் சுப்ரமணி, 60, பிரகாஷ், 57. செவ்வாய்ப்பேட்டையில் மூட்டை துாக்கும் பணியில் ஈடுபடும் இவர்கள், நேற்று இரவு, சந்தைப்பேட்டை டாஸ்மாக் கடை அருகே மது அருந்தினர். அப்போது, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், பீர் பாட்டிலை உடைத்து சுப்ரமணி வயிற்றில் குத்தினார். அதில் படுகாயம் அடைந்த அவரை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தி.மு.க., சாதனைகளை விளக்கி
பொங்கல் கொண்டாட அறிவுரை
சேலம், ஜன. 13-
தி.மு.க., சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி பொங்கல் பண்டிகையை கொண்டாட, கட்சி நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ., அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அறிக்கை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜன., 15ல், சேலம் மத்திய மாவட்டம் முழுதும், மஞ்சள், கரும்பு வைத்து பொங்கலிட்டு தி.மு.க., கொடியேற்றி, கட்சி பிரசார பாடல்களை ஒலிபரப்பி, தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட, மாநகர தி.மு.க., நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.
'அட்மா' திட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம், ஜன. 13-
சேலம் மாவட்டத்தில், 'அட்மா' திட்டத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை(அட்மா) திட்டத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், காலியாக உள்ள வட்டார தொழில்நுட்ப மேலாளர் இருவர், உதவி தொழில்நுட்ப மேலாளர், 12 பேர், ஒரு கணக்காளர், எழுத்தர் என, 15 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்களை, 'வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், செரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகே, சேலம் - 1' என்ற முகவரிக்கு, 10 நாளில் அனுப்பி வைக்க வேண்டும்.
மனைவியை தாக்கிய
கணவருக்கு 'காப்பு'
சேலம், ஜன. 13-
சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பிரதான சாலையை சேர்ந்தவர் வடிவேல், 40. இவரது மனைவி சுஷ்மிதா, 27. குடும்ப பிரச்னையால், தம்பதியர் தனித்தனியே வசிக்கின்றனர். இந்நிலையில் சுஷ்மிதா, கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, கடந்த வாரம், தெற்கு சரக துணை கமிஷனர் லாவண்யாவிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரிக்க, டவுன் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, தம்பதியிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். அப்போது, வடிவேல், சுஷ்மிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், கணவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் குப்பை
காலைக்கதிரால் உடனடி நடவடிக்கை
சேலம், ஜன. 13-
சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான வெளிநோயாளிகள், பார்வையாளர்கள் வருகின்றனர். அங்கு உள்நோயாளிகள் பயன்படுத்திய உணவு பொட்டலங்கள், மருந்து உள்ளிட்ட கழிவு தினமும் டன் கணக்கில் சேகரித்து வைக்கப்படும். அப்படி வைக்கப்பட்ட குப்பையை, 3 நாளாக அகற்றாததால் துர்நாற்றம் வீசியதோடு, நோயாளிகள், பார்வையாளர்கள் முகம் சுளித்தனர்.
குப்பை குவிக்கப்பட்ட படம், மதியம், 12:00 மணிக்கு எடுக்கப்பட்டது. 12:30 மணிக்கு, 'காலைக்கதிர்' நிருபர், மாநகராட்சி நகர் நல அலுவலர் யோகானந்தை தொடர்பு கொண்டு கேட்டார். அவர், 'வாகன பழுதால் தாமதமாகியுள்ளது. உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதையடுத்து மதியம், 2:30 மணிக்கு குப்பை அகற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடத்த முடிவு
மாநில தலைவர் அறிவுரை
தாரமங்கலம், ஜன. 13-
தாரமங்கலம் அருகே குருக்குப்பட்டி ஊராட்சி, பவளத்தானுார் ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த ஊர் முக்கிய பிரமுகர்கள் முடிவு செய்து இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தை ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு தேவைப்படும் இடம், மாடுபிடி வீரர்கள், காளைகளை பரிசோதனை செய்ய தனித்தனி கூடாரம், பாதுகாப்பு வசதி, வழிமுறை குறித்து விளக்கம் அளித்தார். முறைப்படி தமிழக அரசின் சட்ட விதிக்குட்பட்டு, கலெக்டரின் அனுமதி பெற அறிவுத்தினார். அதற்கு பின், போட்டிகளை நடத்தித்தர தயாராக இருப்பதாக, ராஜசேகர் தெரிவித்தார். இதில் தாரமங்கலம் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், விழாக்குழுவினர், மக்கள்
பங்கேற்றனர்.
'நம்ம ஊரு
மோடி பொங்கல்'
வாழப்பாடி, ஜன. 13--
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாழப்பாடி அருகே சந்தைப்பேட்டை, சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று, 'நம்ம ஊரு மோடி பொங்கல்' நிகழ்ச்சி, பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நேற்று நடந்தது.
அக்கட்சி நிர்வாகிகள், மக்கள், பொங்கல் வைத்து, கரும்பு, வாழைப்பழம், தேங்காய் வைத்து படைத்து வழிபட்டு, பொங்கலை பகிர்ந்து கொண்டாடினர். மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்பட பலர்
பங்கேற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மரணம்
புதுடில்லி, ஜன. 13--
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், 75, உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ். நேற்று மாலை நினைவிழந்த நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தும், பலன் இன்றி இறந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக
கூறப்படுகிறது.
திருமணத்துக்கு காதலன் மறுப்பு
கர்ப்பிணியான காதலி புகார்
ஓமலுார், ஜன. 13-
திருமணத்துக்கு காதலன் மறுப்பதாக, கர்ப்பிணியான காதலி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
காடையாம்பட்டி தாலுகா சக்கரைசெட்டிப்பட்டியை சேர்ந்த, கிருஷ்ணன் மகள் அம்சலேகா, 33. எம்.ஏ., பி.எட்., முடித்துள்ளார். இவர், நேற்று முன்தினம், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:
சக்கரைசெட்டிப்பட்டியை சேர்ந்த, பழனிசாமி மகன் தினேஷ், 31. இவரும் நானும் காதலித்த நிலையில் தனியே வீடு எடுத்து தம்பதியராக வாழ்ந்தோம். இதனால், இரு மாத கர்ப்பமாக உள்ளேன். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள கேட்டபோது தினேஷ் மறுத்துவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சமுதாயக்கூடம் அமைக்க
கவுன்சிலர் வலியுறுத்தல்
ஆத்துார், ஜன. 13-
ஆத்துார் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பத்மினிபிரியதர்ஷினி தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கவுன்சிலர் பன்னீர்செல்வம்: சொக்கநாதபுரத்தில் சமுதாயக்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர் பெயர்கள், ஊராட்சி அலுவலக பெயர் பலகையில் வைக்க வேண்டும்.
பத்மினிபிரியதர்ஷினி: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பி.டி.ஓ., செந்தில்: ஊராட்சி பகுதிகளில் விளையாட்டு போட்டிக்கு ஆன்லைனில் இளைஞர்கள் பதிவு செய்ய வேண்டும். சமுதாய பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
துணைத்தலைவர் கன்னியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.