ஓடுகளை பிரித்து வீட்டில் திருட்டு
சேலம்: கிச்சிப்பாளையம், கொல்லம்பட்டறை, பாரதியார் தெருவை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராஜ்குமார், 38. நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டி விட்டு, டவுனில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை திரும்பிவந்தபோது, ஓடுகள் அகற்றப்பட்டிருந்தன. மேலும் பீரோவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய், 2 கிராம் தங்க தோடு, வெள்ளி கொலுசை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வடமாநில டிரைவர் மர்மச்சாவு
காடையாம்பட்டி: காடையாம்பட்டி அடுத்துள்ள தொப்பூர் எல்லையில், பூ மார்க்கெட் எதிரே, 20 நாளாக, மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி நின்றிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, நேற்று முன்தினம் இரவு, தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சென்று பார்த்தபோது, டிரைவர் இருக்கையில் இறந்து கிடந்தார். மகாராஷ்டிராவை சேர்ந்த தத்தா, 35, என விசாரணையில் தெரிந்தது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடன் கைது; 9 பைக் மீட்பு
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், சமீபத்தில், 4 பைக்குகள் திருடப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை போலீசார் விசாரித்தனர். அதில், அன்னதானப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி, 40, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று கைது செய்த போலீசார், மருத்துவமனையில் திருடியது, 4, பிற பகுதியில், 5 என, 9 பைக்குகளை மீட்டனர்.
சிறுமியை சீண்டிய முதியவர் கைது
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரத்தை சேர்ந்த, 5 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு முதியவர், சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார்படி, ஓமலுார் மகளிர் போலீசார் விசாரித்ததில், சவுரியூரை சேர்ந்த தறித்தொழிலாளி அர்த்தனாரி, 61, என தெரிந்தது. அவரை, 'போக்சோ' சட்டத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர்.
Advertisement