பனமரத்துப்பட்டி, ஜன. 13-
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் தமிழ்செல்வி பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.
அதில், 'ட்ரோன்' மூலம் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், தோட்டக்கலை பயிர்கள், சிறுதானிய பயிர்களில் மதிப்பு கூடுதல் செய்தல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சந்திரசேகரன், ரவி, சுபா ஆகியோர், இயற்கை முறையில் மண்வளம் காத்தல், தோட்டக்கலை பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மை, புது ரகங்கள், அவற்றின் சிறப்புகள் குறித்து விளக்கினர்.
தோட்டக்கலை இணை பேராசிரியர் மாலதி, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி குழுமம் ஆகியவை வெளியிட்ட தோட்டக்கலை பயிர்களின் புது ரகங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார்.