செல்லக்குட்டப்பட்டியில் தமிழகத்தின் 5வது ஜல்லிக்கட்டு நடுகல் கண்டுபிடிப்பு| Tamil Nadus 5th jallikattu stone discovery at Chellakuttapatti | Dinamalar

செல்லக்குட்டப்பட்டியில் தமிழகத்தின் 5வது ஜல்லிக்கட்டு நடுகல் கண்டுபிடிப்பு

Added : ஜன 13, 2023 | |
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லக்குட்டப்பட்டியில், தமிழகத்தின் ஐந்தாவது ஜல்லிக்கட்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து, 'மாணவர்களை நோக்கி வரலாறு' என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று,கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லக்குட்டப்பட்டியில், தமிழகத்தின் ஐந்தாவது ஜல்லிக்கட்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து, 'மாணவர்களை நோக்கி வரலாறு' என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வரலாறு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து மாணவர்களை, அருகிலுள்ள செல்லக்குட்டப்பட்டி திரவுபதி அம்மன் கோயில் பகுதிக்கு கள ஆய்விற்கு அழைத்து சென்றனர். அப்போது, வீரகவுண்டர் என்பவரது நிலத்தில், புதர் மூடி இருந்த நடுக்கல்லை சுத்தம் செய்தபோது, அது தமிழகத்தின், ஐந்தாவது ஜல்லிக்கட்டு நடுகல் என தெரியவந்தது.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது நடுகல் இதுவாகும். சேலம் மாவட்டத்தில் இரண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் அகரத்தில் கண்டுபிடித்த நடுக்கல் ஒன்று என மொத்தம், நான்கு ஜல்லிக்கட்டு நடுகற்கள் கிடைத்த நிலையில், தற்போது கிடைத்துள்ளது, தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, ஐந்தாவது நடுகல்.
இதில், வீரன் காளையின் திமிலை பற்ற முற்படுவது போலவும், அதே நேரம் காளை அவ்வீரனை தன் கொம்பால் குத்துவதும் காட்டப்பட்டுள்ளது. ஏறுதழுவுதலின் போது இறந்திருந்தாலும், இவன் ஒரு போர் வீரன் என்பதை குறிக்கும் வண்ணம், மேல்பகுதியில் ஒரு வாள் படுக்கைவாக்கில் காட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏறுதழுவுதல், ஆநிரை மீட்டல் போன்ற நடுகற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. பொங்கல் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏறு தழுவும் நடுகல் கண்டறியப்பட்டிருப்பது சிறப்பு.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர் முரளி உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X