தர்மபுரி, ஜன. 13-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தர்மபுரி நகர், புறநகர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அதிகளவில் ஜவுளிக்கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கடந்த சில தினங்களாக தர்மபுரி நகரிலுள்ள கடைகளில் புத்தாடைகள், நகை, அலங்கார பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தர்மபுரி நகரில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு, இரு தினங்கள் மட்டும் உள்ள நிலையில், தர்மபுரி நகரில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், தர்மபுரி நகர், புறநகர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, போலீசார், நேற்று முதல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒருவழிப்பாதையாக மாற்றி உள்ளனர்.
மேலும், சின்னசாமி நாயுடு தெரு, ராஜகோபால் கவுண்டர் பூங்கா ஆகிய பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் நடைபாதை கடைகள் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.