அரசு மருத்துவமனையில்
சமத்துவ பொங்கல் விழா
கிருஷ்ணகிரி, ஜன. 13-
காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி, டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில், மருத்துவ அலுவலர்கள், காவேரிப்பட்டணம் ஜே.சி.ஐ., நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் இணைந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்; அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
சித்த மருத்துவர் மரியா ஜூலியட் தங்கம், மருத்துவ அலுவலர் நித்யா, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், புறநோயாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துாய்மை பணியாளர்களுக்கு
நலவாரிய அட்டை வழங்கல்
கிருஷ்ணகிரி, ஜன. 13-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம ஊராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா நடந்தது. துாய்மை பணியாளர்கள் சங்க தலைவர் குருமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் ரவிக்குமார், செந்தில், ஆகியோர், 150 துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினர். மாநில துாய்மை பணியாளர் சங்க தலைவர் லட்சுமணன், முருகம்மாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவேகானந்தர் ஜெயந்தி விழா
ஓசூர், ஜன. 13-
தேன்கனிக்கோட்டை, பா.ஜ., மற்றும் பொதுமக்கள் சார்பில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. பா.ஜ., நகர தலைவர் வெங்கட், மாவட்ட செயலாளர் பார்த்திபன், நகர பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோதண்டராமன், ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரபு, ஹிந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜன. 13-
கிருஷ்ணகிரி கனிம வள துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள், பர்கூர் அருகே ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 28 டன் கிரானைட் கற்கள் கடத்தியது தெரிந்தது. அதிகாரிகள் புகார்படி, பர்கூர் போலீசார் கிரானைட் கற்களையும், லாரியையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அரசு பள்ளியில் பொங்கல் விழா
அரூர், ஜன. 13-
அரூர் அடுத்த கொளகம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில், தலைமையாசிரியர் மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ரத்த தான முகாம்
தர்மபுரி, ஜன. 13-
விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று ரத்த தான முகாம் நடந்தது. முகாமுக்கு, ரத்த தான வங்கி டாக்டர் லாவண்யா தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மேற்பார்வையாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திராவை சேர்ந்த, 10 பேர் ரத்த தானம் வழங்கினர்.
சந்தையில் மல்லிப்பூ கிலோ ரூ.1,500
தர்மபுரி, ஜன. 13-
தர்மபுரி பூ மார்க்கெட்டில், பொங்கல் பண்டிகையால், சில பூக்களின் விலை உயர்ந்து விற்பனையாகிறது. அதன்படி நேற்று, ஒரு கிலோ மல்லிப்பூ, 1,500 ரூபாய் எனவும், குண்டுமல்லி, 1,200, கனகாம்பரம், 1,000, ஜாதிமல்லி மற்றும் காக்கடா, 800, அரளி, 300, பன்னீர் ரோஜா, 200, சம்பங்கி, 100 ரூபாய் என விற்பனையானது.
காங்., - எம்.பி., பிறந்த நாள் விழா
ஊத்தங்கரை, ஜன. 13-
ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., செல்லக்குமாரின், 63வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக ஊத்தங்கரை சிவன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தொடர்ந்து ரவுண்டானாவில் உள்ள ராஜிவ், காமராஜர் சிலைக்கு, மாலை அணிவித்து,கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வாகனம் மோதி தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி, ஜன. 13-
திருப்பத்துார் ஷெரீப் நகரை சேர்ந்தவர் முனவர் பாஷா, 50, கூலித்தொழிலாளி; கடந்த, 10ல் இரவு போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி அருகே, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர், ஜன. 13-
வி.சி., கட்சி சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூர் சப் கலெக்டர் அலுவலகம் முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் நந்தன் பேசினார். ஓசூர் சட்டசபை தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், நகர தொண்டரணி அமைப்பாளர் சூரியவளவன் மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களுக்கு புத்தாடை
அரூர், ஜன. 13-
அரூர் நகர, தி.மு.க., சார்பில், அரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து, சுமை துாக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட, 75 பேருக்கு புத்தாடை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னரசு, பொன்னேரி கூட்டுறவு சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடைகள்
2 நாட்கள் விடுமுறை
தர்மபுரி, ஜன. 13-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும், 16ல், தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதை ஒட்டிய பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதேபோன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வரும், 26ல், மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நாட்களில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள், தனியார் மதுபான கடைகளை திறந்து வைத்தாலோ, அனுமதியின்றி மதுபானம் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பு வழங்கல்
ஓசூர், ஜன. 13-
வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி, சூளகிரி அடுத்த டி.கொத்தப்பள்ளி ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சூளகிரி, தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாக்யராஜ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, பஞ்., தலைவர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள், ரேஷன்கடை விற்பனையாளர் உள்பட பலர் உடனிருந்தனர்.