ஓசூர், ஜன. 13-
ஓசூர் அடுத்த ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமையில், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழுவினர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா ஆகியோரிடம் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகி வருகிறது. கடந்த, 2017ல், 740 மாணவர்கள் பயின்ற நிலையில் தற்போது, 1,600 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. அலுவலக பணியாளர்களும் குறைவாகவே உள்ளனர். எனவே, பள்ளி அலுவலகத்திற்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர், பதவி எழுத்தர், இரவு காவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பிரிவில் தமிழ், ஆங்கிலம், மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர்களை நிரப்ப வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, புதிதாக உருவாக்கப்பட வேண்டிய, முதுகலை ஆசிரியர் பணியிடங்களான உடற்கல்வி இயக்குனர், கணினி ஆசிரியர், தமிழ், ஆங்கில ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.