கிருஷ்ணகிரி, ஜன. 13-
நிலப்பிரச்னையில், இரண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அகரம் முருகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன், 34; இவர், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் தந்தையிடம் நிலம் வாங்கி வீடு கட்டி வருகிறார். இதனால், சிலம்பரசன், ரமேஷ் தரப்பினருக்கு இடையே நிலப்பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து கடந்த, 6 மாதங்களுக்கு முன், சிலம்பரசன் தரப்பில் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை, தான் புதிதாக கட்டும் வீட்டருகே மனைவி தனலட்சுமி, தம்பி மனைவி அனிதா ஆகியோருடன் சிலம்பரசன் இருந்துள்ளனர். அங்கு வந்த ரமேஷ் தரப்பை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், அவரிடம் தகராறு செய்து, வீட்டின் முன் போட்டிருந்த ஷெட்டை அடித்து நொறுக்கினர்.
அப்போது ஷெட்டை இடிப்பதை தடுத்த தனலட்சுமி, அனிதா ஆகியோரை ரமேஷ் கடுமையாக தாக்கினார். பின் அனிதா கையிலிருந்த அவரது இரண்டு வயது பெண் குழந்தையை பிடுங்கி, அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி, அனிதா மற்றும் இரண்டு வயது குழந்தை, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.