ஓசூர், ஜன. 13-
சூளகிரி அருகே மூன்றாவது சிப்காட் அமைக்க கோனேரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில், 2,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பல விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்க மாட்டோம் எனக்கூறி போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் தலைமையில், சூளகிரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, சிப்காட் அமைப்பு எதிர்ப்பு விவசாயிகள் கூறுகையில், 'விரும்பி நிலங்களை கொடுத்தவர்கள், 90 சதவீத பேர் உள்ளனர். அந்த நிலங்களில் சிப்காட் அமைக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், நிலத்தை வழங்க விரும்பாத சிறு, குறு விவசாயிகள் வாழ்வாதாரத்தை முடக்க விட மாட்டோம்' என்றனர்.
முன்னாள் பஞ்., தலைவர் அஸ்வத்நாராயணன், காங்., விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் சக்கரலப்பா, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் முரளி மற்றும் நல்லகானகொத்தப்பள்ளி, குண்டுகுறுக்கி, குருபராத்தப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.