அரூர், ஜன. 13-
அரூர், திருப்பத்துார் சாலையில் அன்னபூர்ணா என்ற பெயரில், திருமூர்த்தி, 50, என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு, நேற்று விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, டீ, காபி மற்றும் உணவு சாப்பிட்டவர்கள், கவுன்டரில் அதற்குண்டான பில் தொகையை கொடுக்க சென்றபோது, கடை ஊழியர்கள் அதை வாங்கவில்லை. மாறாக, இன்று விவேகானந்தர் பிறந்தநாள் என்பதால், அனைவருக்கும் உணவு இலவசம் என விளக்கமளித்தனர். இதனால், அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, ஓட்டல் உரிமையாளர் திருமூர்த்தி கூறுகையில்,''விவேகானந்தரின் மீதான பற்றால், அவரது பிறந்த நாளில் அரூர் பழையபேட்டையிலுள்ள கரிய பெருமாள் கோவில் மற்றும் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் உணவு வழங்குவேன். இந்தாண்டு, என் ஓட்டலில் நேற்று காலை முதல், இரவு வரை, 1,300க்கும் மேற்பட்டோருக்கு டீ, காபி மற்றும் சாப்பாடு இலவசமாக வழங்கப்பட்டது,'' என்றார்.