அரூர், ஜன. 13-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டியில், அரூர் டவுன் பஞ்.,க்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் புகை, மாசடைந்த காற்று மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பால், மாவேரிப்பட்டி ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் மாசடைந்த நீரை குடிக்க வேண்டி உள்ளதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்த செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, டிச., 15ல் வெளியானது.
இதையடுத்து, மாவேரிப்பட்டி மற்றும் மாவேரிப்பட்டி புதுார் கிராமத்திற்கு, ஒகேனக்கல் குடிநீர் வழங்க, குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அரூர் டவுன் பஞ்., தலைவர் இந்திராணி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, ஒகேனக்கல் குடிநீர் வினியோகத்தை துவக்கி வைத்தார். கவுன்சிலர் முல்லைரவி, துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், துாய்மை பணியாளர்கள் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.