பாலக்கோடு, ஜன. 13-
தர்மபுரியில், புகையில்லா போகியை கொண்டாட, பொதுமக்களிடம் குப்பையை வாங்க வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகியன்று மக்கள், பழையன கழிதலும் புதியன புகுதல் என்பதாக, பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவர். இதனால் ஏற்படும் மாசு, சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. இதை தடுக்க, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலக்கோடு டவுன் பஞ்.,ல் போகி பண்டிகையின்போது, பொதுமக்கள் பழையனவற்றை எரிப்பதை தடுக்கும் வகையில், அவர்களிடமிருந்து குப்பையை சேகரிக்க, பாலக்கோடு டவுன் பஞ்., நிர்வாகம் சார்பாக, நேற்று துாய்மை பணியாளர்களுடன் கூடிய வாகனத்தை, பாலக்கோடு டவுன் பஞ்., தலைவர் முரளி துவங்கி வைத்தார்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க, குப்பையை எரிக்காமல், டவுன் பஞ்., சார்பாக துவங்கி வைத்துள்ள குப்பை சேகரிக்கும் வாகனத்தில், குப்பையை வழங்க அறிவுறுத்தினர். இதில், டவுன் பஞ்., செயல் அலுவலர் டார்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் உட்பட, பலர் பங்கேற்றனர்.